Viruvirupu
சீமான் சவால்: கருணாநிதி பற்றி நான் சொல்கிறேன்! ஜெயலலிதா பற்றி நீங்க சொல்லுங்க!!
தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்வது ‘கபட நாடகம்’ என்று கண்டுபிடித்து மக்களுக்கு தெரிவித்துள்ள சீமான், முதல்வர் ஜெயலலிதா செய்வது என்ன என்பதை, நீங்களாக பார்த்து முடிந்தவரை புரிந்து கொள்ளுங்கள் என மக்கள் தலையில் அந்தப் பொறுப்பை போட்டு விட்டுள்ளார். சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், “சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை தி.மு.க. எதிர்ப்பதாக கூறியது. ஆனால், நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் அந்த முடிவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். அதுதான், அக்கட்சித் தலைவர் கருணாநிதி நடத்திய கபட நாடகம். டில்லியில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, இங்கு சென்னையில் வால்மார்ட் நிறுவனம் கட்டிவரும் கட்டடத்தை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுக்கிறார். இது, தொட்டிலை ஆட்டுவதற்கு பிள்ளையை கிள்ளிவிடுவது போன்ற மோசடி அரசியல்” என்று தி.மு.க.வை பிடிபிடியென்று பிடித்தார். ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை விமர்சித்தபோது, ‘கபட நாடகம்’, ‘கடும் மோசடி நட்டுவாங்கம்’ போன்ற சொற்பதங்கள் மிஸ்ஸிங்! “தமிழக அரசு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதில் நேர்மையாகவும் இருக்குமானால், சென்னையில் வால்மார்ட் நிறுவனம் கட்டடம் கட்ட அனுமதிப்பது ஏன்?” என்று கேள்விதான் கேட்டார். “அனுமதித்தது தமிழக அரசின் மோசடிச் செயல்” என்றெல்லாம் சொல்லி, சிக்கலில் மாட்டிக் கொள்ளவில்லை. “கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறிவிட்டு, சங்கரன் கோயில் இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே அணு உலை செயல்படுவதற்கான ஆதரவு தந்ததுபோல், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை இப்போது எதிர்க்கும் தமிழக முதல்வர், தனது முடிவை மாற்றிக்கொண்டு ஆதரிப்பாரா என்கிற ஐயம் ஏற்படுகிறது” என்றும் சொன்னார் சீமான்! அடடா, பாவம், அவருக்கு ஐயம்தான் ஏற்பட்டிருக்கிறது. இன்னமும் உறுதியாக தெரியவில்லை. “நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் எதுவும் தமிழ்நாட்டில் கால் பதிக்க விடமாட்டோம். அவற்றை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தும்போது தமிழக அரசு என்ன செய்கிறது என்பதைப் பொறுத்து, அதனுடைய நேர்மையை தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்று டிசிஷன் பாக்டரை, மக்கள் தலையில் போட்டு விட்டார். அதன் அர்த்தம் என்னவென்றால், கருணாநிதி ஒன்றை சொல்லிவிட்டு, அதற்கு எதிரான செயலை செய்தால், அது கபட நாடகம் என்று சீமானே கண்டுபிடித்து மக்களுக்கு சொல்லி விடுவார். ஆனால், ஜெயலலிதா ஒன்றை சொல்லிவிட்டு, அதற்கு எதிரான செயலை செய்தால், மக்கள் சொந்தமாகவே புரிந்துகொள்ள வேண்டியதுதான். உங்களுக்கு சொல்வதற்கு செந்தமிழன் சீமான் வரமாட்டார்!If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
சீமான் சவால்: கருணாநிதி பற்றி நான் சொல்கிறேன்! ஜெயலலிதா பற்றி நீங்க சொல்லுங்க!!
Views:
0 comments:
Post a Comment