Daily Thanthi
அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் தீர்மானம்
அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த நாம் தமிழர் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாம் தமிழர் கட்சி மாநாடு
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மாநாட்டின் தொடக்கமாக இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாநாட்டு மேடை அருகில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜோதி ஏற்றி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாநாட்டு மேடை அருகில் வைக்கப்பட்டு இருந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திருவுருவ படத்திற்கு சீமான் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தடையை நீக்க வேண்டும்
* தனி ஈழம் மட்டுமே ஒவ்வொரு தமிழருக்குமான தாயக விடுதலை. தமிழ் தேசியத்துக்கான விடுதலையும் அதுவே. ஒரே இலங்கைக்குள் ஒற்றை ஆட்சிக்குள் வாழ்கிறீர்களா? அல்லது தனித் தமிழீழமாக மீள்கிறீர்களா? என கேட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும். இன அழிப்பு போரில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் மீதும், ராஜபக்சே மீதும் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை ரத்து செய்ய முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும்.
* முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை அடைந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை மத்திய, மாநில அரசுகள் மனசாட்சியோடு விடுதலை செய்ய வேண்டும். அவர்களை விடுதலை செய்வதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு தாயுள்ளத்தோடு மேற்கொள்ள வேண்டும்.
ஆந்திர அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை
* செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசு அதிகாரிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவது உரிய நியாயத்துக்காக போராடும் ஒவ்வொரு தமிழர்களையும் கொல்வதற்கு சமமான கொடூரம் ஆகும். எனவே அப்பாவி தொழிலாளர்களை காட்டு மிராண்டித்தனமாக சுட்டுக்கொன்ற ஆந்திர அரசு அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றிய நியாயமான விசாரணைக்கு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
* தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த விவசாயத்தையே முடக்கி போடும் அளவிற்கு கர்நாடக அரசு அணை கட்டுவதற்கும், முல்லைப்பெரியாறு அணை அருகே கேரளா புதிய அணை கட்ட முயற்சிப்பதற்கும் மத்திய அரசு உடனடியாக தடை விதித்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும்.
மது விற்பனை கூடாது
* தமிழகத்தில் மது விற்பனையை அரசு உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசு கல்வி கொள்கையில் இந்துத்வாவை நுழைக்கும் முயற்சியை கைவிடவேண்டும். விவசாயிகளை பாதிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment